ராமநாதபுரம்
23 பேரை ஏமாற்றி ரூ.1¼ கோடியுடன் தப்பி வந்ததாக மண்டபம் அகதி மீது புகார்
|வெளிநாடு அனுப்புவதாக கூறி இலங்கையில் 23 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்துவிட்டு தமிழகம் தப்பி வந்து மண்டபம் முகாமில் தங்கி உள்ள அகதி மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டை சேர்ந்த வாலிபர் நேரில் வந்து அளித்துள்ளார்.
வெளிநாடு அனுப்புவதாக கூறி இலங்கையில் 23 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்துவிட்டு தமிழகம் தப்பி வந்து மண்டபம் முகாமில் தங்கி உள்ள அகதி மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டை சேர்ந்த வாலிபர் நேரில் வந்து அளித்துள்ளார்.
மோசடி
இலங்கை திரிகோணமலை வெறுகல் பகுதியைச் சேர்ந்த வாலிபர், ஜெயக்குமார். இவர் ராமநாதபுரம் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழியின்றி பலர் உள்ளனர். அப்போது, எங்கள் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் ரூ.6 லட்சம் கொடுத்தால் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறினார். அவரின் பேச்சை நம்பி பணத்தை கொடுத்தேன். என்னையும் சேர்த்து மொத்தம் 23 பேர் தலா ரூ.6 லட்சம் கொடுத்தோம். பணத்தை பெற்றுக்கொண்ட ஜனார்த்தனன் எங்களை ஏமாற்றி விட்டு கள்ளத்தோணியில் தமிழகம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி உள்ளார். ரூ.1 கோடியே 38 லட்சம் ஜனார்த்தனன் மோசடி செய்தது தொடர்பாக திரிகோணமலை போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனார்த்தனன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைவரின் சார்பில் நான் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஜெயக்குமார் மேலும் கூறும்போது, மண்டபம் முகாமில் உள்ள ஜனார்த்தனனுக்கு சிலர் இந்திய பணமாக மாற்றி கொடுத்துள்ளனர். அவரை நம்பி ஏமாந்த 23 குடும்பங்களும் வாழ வழியின்றி தவித்து வருகிறோம் என்றார்.
நடவடிக்கை
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை கூறியதாவது:-
அகதி ஜனார்த்தனன் தொடர்பான புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். தனி அதிகாரி மூலம் அதனை விசாரித்து தவறு நடந்துள்ளதா? என கண்டறியப்படும். பணம் கொண்டு வந்தது உண்மைதானா. அதனை யார் வாங்கி மாற்றிக்கொடுத்தார்கள்? என்று விசாரிக்கப்படும். ஜனார்த்தனன் மீது இலங்கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவதால் அதன் விவரங்களை கியூ பிரிவு போலீசார் மூலம் பெற்று அதன் அடிப்படையில் உரிய வழிமுறைகளை பின்பற்றி அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.