< Back
மாநில செய்திகள்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்

தினத்தந்தி
|
12 Dec 2022 5:43 AM IST

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பெயர் சேர்ப்பதற்கு மட்டும் 10.34 லட்சம் பேர் படிவத்தை பூர்த்தி செய்துள்ளனர்.

சென்னை,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதியன்று தொடங்கின. தமிழக தேர்தல் ஆணையம் அன்றைய தினம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர்.

நவம்பர் 9-ந் தேதி முதல் கடந்த 9-ந் தேதி வரை திருத்த பணிகளுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்-நீக்கம், பெயர், வயது, முகவரி, பாலினம் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், ஆதார் விவரங்கள் அளிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு முகாம்கள்

நவம்பர் மாதம் 12, 13 மற்றும் 26 மற்றும் 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்களும் நடந்தன.

கடந்த 9-ந் தேதி வரையிலான நிலவரப்படி நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் என வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 34 ஆயிரத்து 18 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் திருவள்ளூரில் அதிகபட்சமாக 62 ஆயிரத்து 658 பேரும், அதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 55 ஆயிரத்து 593 பேரும், சென்னையில் 54 ஆயிரத்து 227 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

பெயர் நீக்கம் செய்ய...

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் பெயர் சேர்க்க 11 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பெயர் நீக்கம் செய்ய ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 90 ஆயிரத்து 555 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன. இதில் சேலத்தில் அதிகபட்சமாக 70 ஆயிரத்து 67 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதைத் தொடர்ந்து 53 ஆயிரத்து 886 விண்ணப்பங்கள் பெற்று திருவள்ளூர் 2-ம் இடத்திலும், 41 ஆயிரத்து 816 விண்ணப்பங்கள் பெற்று திருச்சி 3-ம் இடத்திலும் உள்ளன.

பெயர் உள்பட சுயவிவரங்கள் மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய 4 லட்சத்து 78 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் கோவையில் அதிகபட்சமாக 37 ஆயிரத்து 235 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதற்கு அடுத்து திருவள்ளூரில் 30 ஆயிரத்து 181 பேரும், சேலத்தில் 27 ஆயிரத்து 822 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

பெயர் சேர்க்க-நீக்க, முகவரி மற்றும் சுயவிவரங்கள் மாற்ற என ஒட்டுமொத்தமாக 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி வரை தேர்தல் அதிகாரிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதியன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

மேலும் செய்திகள்