< Back
மாநில செய்திகள்
குன்றத்தூர் அருகே 23 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குன்றத்தூர் அருகே 23 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்

தினத்தந்தி
|
7 March 2023 4:11 PM IST

குன்றத்தூர் அருகே 23 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆகியது. இந்த தீ விபத்தில் அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

மின்கசிவு காரணமாக...

குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கலைஞர் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிறிய அளவிலான குடிசை வீடுகளில் வடமாநிலம் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வாடகைக்கு வசித்து வந்தனர். இங்கு வசிக்கும் ராஜாராம் என்பவரது வீட்டில் நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அந்த வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

23 குடிசை வீடுகளும் சாம்பல்

சிறிது நேரத்தில் அந்த வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியபடி பறந்ததால் அதன் அருகில் இருந்த மற்ற குடிசைகளின் மீதும் தீப்பொறி விழுந்தது. எனவே அடுத்தடுத்து 23 வீடுகளில் தீயானது பரவி கொழுந்து விட்டு எறிந்தது. வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்தபடி சிதறி ஓடினார்கள். இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து தாம்பரம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரும் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 23 குடிசை வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலானது.

வீட்டில் இருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், வீட்டிற்கு தேவையான கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது

அமைச்சர் ஆய்வு

இந்த சம்பவம் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.செல்வ பெருந்தகை, குன்றத்தூர் ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன், திருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்களை தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு வீடுகள் புதிதாக கட்டுவதற்கும் நிதி தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 23 வீடுகள் அடுத்தடுத்து தீயில் எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்