கரூர்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 22-ந்தேதி எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா
|கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா 22-ந்தேதி நடக்கிறது.
எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கரூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதற்கு ஆர்.டி.ஓ. ரூபினா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவில் வளாகம், விழா நடைபெறும் இடம், ஊர்வலம் செல்லும் இடங்கள் மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் போலீசாரால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இப்பகுதிகளில் தடையில்லா மற்றும் சீரான மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
வாகன நிறுத்துமிடம்
திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். தேவையான வாகன நிறுத்துமிடம் அமைத்து, அப்பகுதியில் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும். விழாவுக்கு வரும் சிவனடியார்கள் தங்குமிடம், அன்னதானம் வழங்கும் இடம், கோவில் வளாகம், விழா நடைபெறும் இடம், ஊர்வலம் செல்லும் இடங்கள், பக்தர்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளில் முழுமையாக தூய்மைப் படுத்தி நோய்தடுப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு ஆங்காங்கே போதுமான குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் சிவனடியார்கள் பலர் கலந்து கொண்டனர்.