திருவள்ளூர்
பூண்டி ஏரிக்கு 2,210 கனஅடி நீர் வரத்தால் 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை
|பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் 97 மில்லி மீட்டர் மழை பெய்ததால் ஏரிக்கு 2 ஆயிரத்து 210 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஏரி 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
பூண்டி ஏரி
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 97 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது.
பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் 390 கன அடியும், மழை நீராக 2 ஆயிரத்து 210 கன அடியும் என மொத்தம் 2 ஆயிரத்து 600 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி (3.3 டி.எம்.சி.)கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு 2 ஆயிரத்து 600 கன அடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 2,902 மில்லியன் கன அடி (2.9 டி.எம்.சி.) ஆக உயர்ந்து உள்ளது. குடிநீர் தேவைக்காக இங்கிருந்து 1,684 கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஏரி 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஏரிகளின் நீர் மட்டம்
1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு 572 கனஅடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 190 மில்லியன் கனஅடியாக இருந்து வருகிறது. இங்கிருந்து 40 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அதேபோல் 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரிக்கு 421 கன அடி வீதம் நீர்வரத்து மூலம் ஏரியின் கொள்ளளவு 2,237 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 25 கனஅடி நீர் வரத்து மூலம் 327 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
9 டி.எம்.சி. இருப்பு
3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு 843 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. 2 ஆயிரத்து 860 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட உயரம் 21.09 அடியாக உள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி 22 அடியை தொட்டவுடன் உபரி நிர் திறப்பது வழக்கம். சிக்கராயபுரம் கல்குவாரியில் நீர் நிறைந்து காணப்படுவதால் சென்னை குடிநீருக்காக அதிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரியில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் எடுக்கப்படுவதால் செம்பரம்பாக்கம் ஏரியும் நீர் நிறைந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 8 ஆயிரத்து 174 மில்லியன் கன அடி (8.1 டி.எம்.சி.) நீர் இருந்தது. ஆனால் தற்போது அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 9 ஆயிரத்து 96 மில்லியன் கன அடி (9.9 டி.எம்.சி.) கையிருப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.