கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் ஒரே நாளில் அதிரடியாக கைது!
|கள்ளச்சாராயம் விற்றதாக 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயத்தை குடித்த அதே கிராமத்தை சேர்ந்த சிலர் வாங்கி குடித்துள்ளனர். இதில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக 2 காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், கள்ளச்சாராய விற்பனைய ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது.