தமிழகத்தில் ரேபிஸ் நோய் பாதிப்பால் 22 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்
|தமிழகத்தில் ரேபிஸ் நோய் பாதிப்பால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு, பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தமிழகத்தில் நாய், பாம்பு உள்ளிட்டவைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்தவகையில், கடந்த 2023-ம் ஆண்டு 4 லட்சத்து 41 ஆயிரத்து 804 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அதில் ரேபிஸ் நோய் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்திருந்தனர்.
இதேபோல, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 782 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 22 பேர் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும், 2023-ம் ஆண்டு 19 ஆயிரத்து 795 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு தற்போது வரை 7 ஆயிரத்து 310 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் விலங்குகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் பாம்பு மற்றும் நாய் கடிக்கு வழங்கக்கூடிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 10 ஏ.எஸ்.வி. மருந்து குப்பிகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும். பாம்பு கடியால் அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் ஏ.எஸ்.வி. மருந்தினை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க வேண்டும்.
அந்தவகையில், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குறைந்தபட்சம் 20 ஏ.ஆர்.வி. மருந்து குப்பிகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். நாய் கடித்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அனைவருக்கும் ஏ.ஆர்.வி. மருந்தினை வழங்க வேண்டும். இதனை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் முறையாக பின்பற்ற வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.