புதுக்கோட்டை
குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.2,195 கோடியில் திட்டப்பணிகள்
|புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.2,195 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
குடிநீர் அபிவிருத்தி பணிகள்
புதுக்கோட்டை நகராட்சிக்கு கடந்த 1994-ம் ஆண்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் திருச்சி ஜீயபுரம் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை சரி செய்யும் வகையில் குடிநீர் குழாய்கள் சீரமைத்து ரூ.75.06 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி திருவப்பூரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
4½ கோடி மக்களுக்கு குடிநீர்
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "தமிழ்நாட்டில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 544 இடங்களில் ஆறுகள், கிணறுகள் அமைத்து 4½ கோடி மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த அரசு வந்த பின் கோவையில் 168 எம்.எல்.டி. தண்ணீர் திட்டம், மதுரையில் 158 எம்.எல்.டி. திட்டம், சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 250 எம்.எல்.டி. தண்ணீர் திட்டம் ஆகியவை வருகிற 30 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தினந்தோறும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
ரூ.2,195 கோடியில் திட்டப்பணிகள்
முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் வழங்குவதற்காக ரூ.2,195 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் பாதாள சாக்கடையில் எந்திரம் மூலம் கழிவுகள் எடுக்கிற வசதி உள்ளது. விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் சில இடங்களில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் கழிவுகளை மனிதர்களை கொண்டு அகற்றும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு எந்திரங்கள் கொண்ட வாகனங்கள் வாங்கி கொடுக்க அரசு தயாராக உள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, திருவண்ணாமலை நகராட்சிகளை மாநகராட்சியாக விரைவில் தரம் உயர்த்தப்படும். வடகிழக்கு பருவ மழை தொடர்பாகவும் கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு குடிநீர் தவறாமல் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது'' என்றார்.
பாதாள சாக்கடை திட்டம்
நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "தி.மு.க. ஆட்சியில் அறந்தாங்கி நகராட்சியில் ரூ.36 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க அறிவிக்கப்பட்டது. அதன்பின் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தவில்லை. அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.
அதிகாரிகள்
முன்னதாக நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வக்கீல் செல்லபாண்டியன், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய தலைமை பொறியாளர் ஆறுமுகம், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், தி.மு.க. நகர செயலாளர் செந்தில் உள்பட நிர்வாகிகள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.