< Back
மாநில செய்திகள்
வடகிழக்கு பருவமழை மீட்பு பணியில் ஈடுபட காஞ்சீபுரம் மாவட்டத்தில் 21 மண்டல குழுக்கள் ஏற்பாடு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை மீட்பு பணியில் ஈடுபட காஞ்சீபுரம் மாவட்டத்தில் 21 மண்டல குழுக்கள் ஏற்பாடு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
8 Dec 2022 4:07 PM IST

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணியில் ஈடுபட 21 மண்டல குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பருவமழை முன்னெச்சரிக்கை

காஞ்சீபுரம் மாவட்டம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 21 மண்டலக் குழுக்களை நியமித்து பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு இன்று(வியாழக்கிழமை) முதல் அடுத்த 3 நாட்க்ளுக்கு பலத்த புயல் காற்று மற்றும் கனமழை பெய்யகூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுக்களில் வருவாய், காவல், உள்ளாட்சி, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறை அலுவலர்கள் இடம் பெற்றிருப்பர். மேற்படி குழுவினர் மழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளியில் பயணம் தவிர்க்க...

மேலும், பலத்த காற்று வீசும் போது அரசு அறிவுறுத்தும் வரை, வெளியில் செல்லாமல் பாதுகாப்பான கட்டிடங்களில் தங்கி இருக்க வேண்டும். பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ மரத்தின் அருகிலோ தஞ்சமடைவதைத் தவிர்க்கவேண்டும். தேவையான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ளவேண்டும். பலத்த காற்று வீசும் போது வாகனத்தில் வெளியில் பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும். மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் உலோக பொருட்கள் அருகில் நிற்பதை தவிர்க்கவேண்டும். வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளை கவனமுடன் கையாளவேண்டும். வீட்டில் உள்ள கதவுகள் கண்ணாடி சாலரங்கள் ஆகியவற்றை மூடிவைக்க வேண்டும்.

காற்று வீசுவது நின்றுவிட்டால் புயல் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் எதிர்திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதால் தேவையின்றி உடனே வெளியில் வரக்கூடாது.

தொலைபேசி எண்களில் தொடர்பு

காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களை முன்கூட்டியே தங்க வைக்கவேண்டும். கூரைவீடு, ஓடு வீடு மற்றும் தகரசீட் போன்ற வீடுகளில் வசிப்பவர்கள் பலத்த காற்று வீசும்போது அரசு அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி அருகாமையில் உள்ள பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு முன்கூட்டியே சென்று விடவேண்டும். நீர்நிலைகளில் மீன்பிடித்தல், குளித்தல் மற்றும் வேடிக்கை பார்க்க செல்லகூடாது. இடி மின்னலின்போது மரத்தின்கீழோ, பொதுவெளியிலோ இருக்க வேண்டாம்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் இடர்பாடுகள் குறித்த புகார்களை எளிதில் உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அவசர கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் மற்றும் சமூக வளைதளங்கள் மூலம் தெரிவிக்கலாம். பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு 044-27237107, 044-27237207 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்