< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 422 மாணவ- மாணவிகள் வெற்றி
ஈரோடு
மாநில செய்திகள்

பிளஸ்-2 தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 422 மாணவ- மாணவிகள் வெற்றி

தினத்தந்தி
|
21 Jun 2022 2:25 AM IST

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். இது 95.72 சதவீத தேர்ச்சியாகும்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். இது 95.72 சதவீத தேர்ச்சியாகும்.

பொதுத்தேர்வு முடிவு

தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 103 அரசு பள்ளிக்கூடங்கள், 2 நலத்துறை பள்ளிக்கூடங்கள், 6 நகரவை பள்ளிக்கூடங்கள், 12 அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 22 சுயநிதி பள்ளிக்கூடங்கள், 79 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 224 பள்ளிக்கூடங்களில் படித்த மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதினார்கள்.

10 ஆயிரத்து 754 மாணவர்கள், 11 ஆயிரத்து 626 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 380 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வுகள் மே மாதம் முடிந்த நிலையில் தேர்வு தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. சென்னையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

ஆர்வமாக பார்த்தனர்

அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் கணினி அல்லது தங்கள் மொபைல் போன்களிலேயே தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை அறிந்து கொண்டனர். முன்னதாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள தனியாக இணையதள முகவரிகள் அறிவிக்கப்பட்டன. அந்த முகவரிகளில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவ-மாணவிகளின் பதிவு எண், பிறந்தநாள் உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதலே மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் தேர்வு முடிவுகளை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து இருந்தனர். காலை 9 மணியில் இருந்தே செல்போன்களில் இணையதள முகவரியை திறப்பதும், அது செயல்பாட்டுக்கு வருகிறதா என்றும் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

மகிழ்ச்சி-சோகம்

காலை 10 மணிக்கு மேல் இணையதளம் செயல்பாட்டுக்கு வந்தது. உடனடியாக மாணவ-மாணவிகள் தங்கள் தேர்வு முடிவுகளை பார்த்தனர். இதில் பலரும் தேர்ச்சி பெற்றதால் உடனடி மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் சற்று சோகத்துக்கு உள்ளாகினார்கள்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, 224 பள்ளிக்கூடங்களில் இருந்து தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 380 பேரில், 21 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். இது 95.72 சதவீதமாகும். 10 ஆயிரத்து 754 மாணவர்களில் 10 ஆயிரத்து 93 பேர் வெற்றிபெற்றனர். இது 93.85 சதவீதமாகும். 11 ஆயிரத்து 626 மாணவிகளில் 11 ஆயிரத்து 329 பேர் வெற்றி பெற்றனர். இது 97.45 சதவீதமாகும். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.

சாதனை

ஈரோடு திண்டலில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்த 2 மாணவர்கள் 600-க்கு 596 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.

224 பள்ளிக்கூடங்களில் 14 அரசு பள்ளிக்கூடங்களும், 1 நிதி உதவி பள்ளி, 61 மெட்ரிக் பள்ளிகள், 9 சுயநிதிபள்ளிகள் என 85 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்து உள்ளன.

அரசு பள்ளி

அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை 103 பள்ளிக்கூடங்களில் மொத்தம் 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 9 ஆயிரத்து 306 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 93.06 சதவீதமாகும். 2 நலத்துறை பள்ளிக்கூடங்களில் 93 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 75 பேர் வெற்றி பெற்றனர். இது 80.65 சதவீதமாகும்.

6 நகரவை-மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் 598 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 511 பேர் வெற்றி பெற்றனர்.

இது 85.45 சதவீதமாகும். 12 நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 1,909 பேர் வெற்றி பெற்றனர். இது 95.45 சதவீதமாகும்.

12 வது இடம்

22 சுயநிதி பள்ளிக்கூடங்களில் 2 ஆயிரத்து 253 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில், 2 ஆயிரத்து 227 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.85 சதவீதமாகும். 79 மெட்ரிக் பள்ளிக்கூடங்களில் படித்த 7 ஆயிரத்து 436 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 7 ஆயிரத்து 394 பேர் வெற்றி பெற்றனர். இது 99.44 சதவீதமாகும். இவ்வாறு மொத்தம் 224 பள்ளிக்கூடங்களில் தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 380 மாணவ-மாணவிகளில் 21 ஆயிரத்து 422 பேர் வெற்றி பெற்று 95.72 சதவீத தேர்ச்சி விகிதத்தை ஈரோடு மாவட்டத்துக்கு அளித்து உள்ளனர். தமிழக அளவில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் 12-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்