செங்கல்பட்டு
மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 21 பேர் காயம்
|மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 21 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் டிரைவராக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 47), கண்டக்டராக சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (44) இருந்தனர்.
பஸ் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி என்ற இடத்தில் செல்லும்போது எதிரே சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 21 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 15 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி மதுராந்தகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.