< Back
மாநில செய்திகள்
அடுத்தடுத்து பற்றி எரிந்த 21 வீடுகள்... வெடித்த சிதறிய சிலிண்டர்கள் - காஞ்சிபுரத்தில் பயங்கரம்
மாநில செய்திகள்

அடுத்தடுத்து பற்றி எரிந்த 21 வீடுகள்... வெடித்த சிதறிய சிலிண்டர்கள் - காஞ்சிபுரத்தில் பயங்கரம்

தினத்தந்தி
|
6 March 2023 4:28 PM IST

திருமுடிவாக்கம் அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் எரிந்து நாசமாயின.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் ராஜாராம் என்பவரது வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவரது வீட்டில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்த போது வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறி அருகில் இருந்த குடிசைகள் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த 21 குடிசைகளில் தீ மளமளவென பரவியது.

தகவலறிந்து வந்த தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் இரண்டு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. 21 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவத்தையடுத்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர். மேலும் வருவாய் துறையினர் விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை நிவாரண முகாமில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்