அரியலூர்
அடகு கடையின் சுவரை துளையிட்டு 209 பவுன் நகைகள் - வெள்ளி பொருட்கள் கொள்ளை
|மீன்சுருட்டி அருகே அடகு கடையின் சுவரை துளையிட்டு 209 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அடகு கடை
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தாலுகா ஸ்ராதானா நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மகன் சங்கர் (வயது 35). இவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில், சங்கர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கடைவீதியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஸ்ரீகணேஷ் என்ற பெயரில் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். கடந்த 28-ந்தேதி இரவு 7 மணியளவில் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சங்கர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் சங்கர் மற்றும் அவரது கடையில் வேலை பார்த்து வரும் தில்கேஷ், அஜித் ஆகியோர் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
209 பவுன் நகைகள் கொள்ளை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையின் பின்பக்க சுவற்றை மர்ம ஆசாமிகள் துளையிட்டு லாக்கரில் வைத்திருந்த தோடு, ஜிமிக்கி, மோதிரம், மூக்குத்தி உள்ளிட்ட 209 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.31¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
வடமாநில கும்பலுக்கு தொடர்பு?
இந்த சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநில கும்பலுக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் கங்காதநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவரை துளையிட்ட வடமாநில கொள்ளையர்கள் அங்குள்ள லாக்கரை உடைக்க முயன்றனர். ஆனால் அந்த லாக்கரை உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்தநிலையில், பாப்பாக்குடியில் தற்போது நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் வடமாநில கும்பலுக்கு தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்தில் ஆந்திர மாநில போலீசார் பாப்பாகுடியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.