< Back
மாநில செய்திகள்
ரூ.136 கோடியில் 205 சாலைப்பணிகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

ரூ.136 கோடியில் 205 சாலைப்பணிகள்

தினத்தந்தி
|
14 Sept 2023 12:15 AM IST

கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.136 கோடியில் 205 சாலைப்பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் சி.பழனி தெரிவித்தார்.

பிரம்மதேசம்

மரக்காணம் ஒன்றியம்

மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வைடப்பாக்கம் ஊராட்சியில், முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வைடப்பாக்கம் முதல் லாலாபேட்டை வரை ரூ.55 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் 1.66 கி.மீ தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் தரத்தை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பெருமுக்கல் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் சமையலறைக்கூடம் கட்டும் பணியை ஆய்வு செய்த அவர் தரமான கட்டுமானப்பொருட்களை கொண்டு பணிகளை மேற்கொண்டு விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

பின்னர் கீழ்அருங்குணம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சம் மற்றும் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்ட அவர் தொடர்ந்து ராவணபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

205 சாலைப்பணிகள்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராம சாலைகளை மேம்படுத்தும் வகையில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.136 கோடியே 11 லட்சம் மதிப்பில் 205 எண்ணிக்கையிலான தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, திருவேங்கடம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்