< Back
மாநில செய்திகள்
2022 விடைபெறுகிறது; உதயமாகிறது 2023:புதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தேனி
மாநில செய்திகள்

2022 விடைபெறுகிறது; உதயமாகிறது 2023:புதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
27 Dec 2022 12:15 AM IST

2022-ம் ஆண்டு விடைபெற்று 2023-ம் ஆண்டு உதயமாக உள்ளது. இந்நிலையில் புதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

2022-ம் ஆண்டு முடிந்து, 2023-ம் ஆண்டு பிறக்கப் போகிறது. புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. புத்தாண்டு பிறக்கிறது என்றால் ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். புத்தாண்டில் சில உறுதிமொழிகளை எடுப்பார்கள். ஆனால், அதை வாழ்வில் கடைபிடித்தார்களா? என்பது அவர்களுக்கு தான் தெரியும். புதிதாக பிறக்கும் ஆண்டு எப்படி இருக்க வேண்டும்? என்ற தங்களது எதிர்பார்ப்புகளை பிரபலங்கள் உள்பட சிலர் பதிவு செய்து இருக்கிறார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

பொருளாதார நிபுணர்

பொருளாதார துறையில் புலமை வாய்ந்த ஓய்வுப்பெற்ற பொருளாதார பேராசிரியர் இல.வெங்கடசாமி:-

உலக அளவில் இந்திய பொருளாதாரம் 3-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளே தள்ளாடிப் போன சூழலில், இந்தியா ஓரளவு மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. உற்பத்தி, தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பழைய நிலைக்கு வந்துள்ளோம். வேளாண் துறையிலும் தன்னிறைவை அடைந்திருக்கிறோம்.

ஜி-20 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்குவது, உலகளவில் இந்தியாவுக்கு பெருமை. உலக நாடுகளும் இதைத்தான் எதிர்பார்க்கின்றன. ஊழலில்லாத இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டிருக்கிறது. எனவே பிறக்கவுள்ள 2023-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் நிச்சயம் முன்னிலைக்கு வரும். அதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக இருக்கிறது. உலகளவில் முதல் இடத்தை நமது நாட்டின் பொருளாதாரம் பிடித்தாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை.

சின்னத்திரை நடிகை

'பூவிழி வாசலிலே' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சின்னத்திரையில் ஜொலிக்கும் நடிகை சுஜிதா:-

ஒவ்வொரு நாடக தொடருமே பல தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உள்ளடக்கியது. கொரோனா காலத்தில் சின்னத்திரையும், சினிமா துறையும் முடங்கியபோது, ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்தனர். கிட்ட இருந்து கூட அவர்களுக்கு உதவ முடியாத சூழலை காலம் ஏற்படுத்தியது. அது கொடுமையான காலம். தற்போது அந்த சூழலில் இருந்து மீண்டு வருகிறோம். புதிய வருடம் கலைத்துறைக்கு இன்னும் நல்ல ஆண்டாக அமையவேண்டும். நல்ல படங்கள் வெளியாக வேண்டும்.

சின்னத்திரை தொடர்களும் நிறைய எடுக்கப்பட வேண்டும். தொடர்கள் நீண்ட நாள் ஓடவேண்டும். அப்போது தான் தொழிலாளர்கள் அனைவருமே நன்றாக இருக்கமுடியும். எனவே இனி வரும் ஆண்டு பேரிடர் இல்லாத ஆண்டாக, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் ஆண்டாகவும், பொருளாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை தரும் ஆண்டாகவும் அமையவேண்டும். அதுவே கலைத்துறையை சேர்ந்தவர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆகும்.

விளையாட்டு வீராங்கனை

காமன்வெல்த் வலு தூக்குதல் போட்டியில் 5 தங்கம் வென்று சாதனை படைத்த சென்னை விளையாட்டு வீராங்கனை டாக்டர் ஆர்த்தி:-

கொரோனா எனும் பேரிடர் இந்தியா உள்பட உலக நாடுகளையே அச்சுறுத்தியது. கொரோனா ஓய்ந்துள்ள நிலையில், படிப்படியாக அனைத்து துறைகளிலும் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது. குறிப்பாக விளையாட்டுத்துறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டுத்துறையின் நிறைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தரும் ஆண்டாக புத்தாண்டு அமையவேண்டும் என்பது என்னை போன்ற வீரர்-வீராங்கனைகளின், ஏன் நாட்டு மக்களின் விருப்பமாகவே இருக்கிறது.

சவாலான சூழலிலும் செஸ் ஒலிம்பியாட்டை தமிழக அரசு சிறப்பாக நடத்திக் காட்டியது. இதுபோலவே வரும் ஆண்டுகளிலும் உலகளாவிய விளையாட்டு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடைபெற வேண்டும். விளையாட்டு வீரர்கள் ஒருமித்த உணர்வுடன் விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்க்கவேண்டும். ஒட்டுமொத்த வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. அதற்கு விளையாட்டு வீரர்களும் சூளுரை ஏற்கவேண்டும். அந்தவகையில் புத்தாண்டு புதுமையான, புத்துணர்ச்சிமிக்க ஆண்டாக அமையட்டும். விளையாட்டு வீரர்களின் கனவுகளையும், ஆசைகளையும் எட்டச்செய்யும் ஆண்டாக இருக்கட்டும்.

ஆரோக்கியமான வாழ்வு

மனோகரன் (ஓய்வு பெற்ற தீயணைப்பு அதிகாரி, தேனி) :- புதிதாக பிறக்கும் புத்தாண்டானது விபத்துகள், இயற்கை பேரிடர்கள் ஏற்படாத ஆண்டாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வை கொடுக்கும், இயற்கை பேரிடர்கள் இல்லாத ஆண்டாக அமைய வேண்டும். ஒவ்வொரு மனிதனின் சுய நலத்தாலும் இயற்கை அழிகிறது. மக்களின் சுயநலம் மற்றும் அலட்சியத்தால் பேரிடர்கள் உருவாகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்த தடை செய்யப்பட்டபோதிலும் அதன் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அது மண்ணுக்கும், நீர்நிலைகளுக்கும் தீங்கானது.

நீர்நிலைகள், நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். மரங்களை அழிப்பதை தவிர்த்து மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும். பணம், சொத்துகள் எவ்வளவு இருந்தாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருந்தால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும். வரும்கால சந்ததிகளும் ஆரோக்கியமாக, வளமாக வாழ்வதற்கு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிமொழியை இந்த புத்தாண்டில் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

கண்ணன் (சாலையோர வியாபாரி, கம்பம்):- மீண்டும் கொரோனா அல்லது அதுபோன்ற வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லாத ஆண்டாக அமைய வேண்டும். கொரோனாவும் அது கொண்டு வந்த ஊரடங்கும் சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கையை பந்தாடியது. இப்போது தான் அதில் இருந்து மீண்டு வருகிறோம். அதற்குள் உருமாறிய கொரோனா வருகிறது என்கிறார்கள். அதன் தாக்கம் இல்லாமல் எல்லோருக்கும் ஆரோக்கியமான வாழ்வை இந்த ஆண்டு கொடுக்க வேண்டுகிறேன்.

விவசாயம் செழிக்க...

சந்திரசேகர் (விவசாயி, உத்தமபாளையம்):- கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக விவசாய பணிகளும், வியாபாரமும் அதிக பாதிப்பை சந்தித்தது. விவசாயிகள் பெரிதும் சிரமங்களை சந்தித்தனர். விளைச்சல் அடைந்த விளை பொருட்களுக்கு நிலையான விலையின்றி பாதிக்கப்பட்டனர். வருகிற புத்தாண்டில் போதிய மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும். விளை பயிர்கள் வீணாகாமல் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட வேண்டும். அதற்கு இயற்கையும், இறைவனும் அருள்புரிய வேண்டும்.

லட்சுமி (குடும்பத்தலைவி, உத்தமபாளையம்) :- புத்தாண்டு பிறப்பு அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் அமைய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் துறையில் நாடு முன்னேற வேண்டும். விலைவாசி குறைந்து மக்களுக்கு சேமிப்பை அதிகரிக்கும் ஆண்டாக அமைந்தால் ஏழை, நடுத்தர மக்கள் பயன் பெறுவார்கள். புதிதாக விலைவாசி உயராத ஆண்டாகவும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

மக்களின் எதிர்பார்ப்பு

மிரட்டும் புதிய வகை கொரோனா விரைவில் ஓய்ந்து, மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும் ஆண்டாக புத்தாண்டு அமையவேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

Related Tags :
மேலும் செய்திகள்