< Back
மாநில செய்திகள்
2019, 2021-ம் ஆண்டுகளில் பதிவான தேர்தல் விதிமீறல் வழக்கு விவரங்கள் - மதுரை ஐகோர்ட்டில் தாக்கல்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

2019, 2021-ம் ஆண்டுகளில் பதிவான தேர்தல் விதிமீறல் வழக்கு விவரங்கள் - மதுரை ஐகோர்ட்டில் தாக்கல்

தினத்தந்தி
|
18 April 2024 12:54 AM IST

2019-ம் ஆண்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 4,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக என் மீது 2011-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தனர். பல ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல. எனவே என் மீதான தேர்தல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இதேபோல விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, பணம், உணவு, பரிசுப்பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுத்து திருப்திப்படுத்தும் நடவடிக்கைகள் அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்த்துவிடும்.

எனவே தேர்தலில் பணப்பட்டுவாடா வழக்குகளை முறையாக விசாரிக்க வேண்டியுள்ளது. இதனால் கடந்த 2019, 2021-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத்தேர்தல், சட்டமன்றத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமாக எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன? அந்த வழக்குகளில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதா? என்ற விவரத்தையும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை முற்றிலும் தடுக்கும் பரிந்துரைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு அதே நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டி.ஜி.பி. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2019-ம் ஆண்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 4,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில் 1,733 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு நடந்த தேர்தல் சம்பந்தமாக 8,655 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அவற்றில் 1,414 வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இறுதி தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்