பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 200-வது நாளாக போராட்டம் - பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் குவிப்பு
|போராட்டம் இன்று 200-வது நாளை எட்டியுள்ள நிலையில், 1,200 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி, உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்கும் கிராம மக்கள் கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 200-வது நாளை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு போராட்டம் நடைபெறும் பகுதியில், காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் தலைமையில் 7 டி.எஸ்.பி. அடங்கிய 1,200 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் மட்டுமின்றி 13 வட்டாட்சியர்களுடன் போராட்டம் நடக்கும் இடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.