< Back
மாநில செய்திகள்
200-வது ஆண்டையொட்டி எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் ரூ.65½ கோடியில் 6 மாடி கட்டிடம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை
மாநில செய்திகள்

200-வது ஆண்டையொட்டி எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் ரூ.65½ கோடியில் 6 மாடி கட்டிடம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
28 Aug 2022 2:11 PM IST

200-வது ஆண்டையொட்டி எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் 6 மாடி கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியின் 200-வது ஆண்டையொட்டி இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.65.60 கோடி செலவில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு 150 படுக்கை வசதிகளுடன் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை போன்ற சிறப்பு கண் சிகிச்சைக்கு தனித்தனி அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இதேபோன்று காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆஸ்பத்திரியில் ரூ.1.77 கோடி மதிப்பில் 'டெலி கோபால்ட்' எந்திரம், கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.5.73 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தீவிர மூளை காய்ச்சல் நோய்க்கான ஆய்வகம் மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ரூ.7.75 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள 18 மின்தூக்கிகள்,

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடம் உள்பட மொத்தம் ரூ.129 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டிலான மருத்துவத்துறை கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் இடமாற்றத்தை எளிதாக்கும் வகையில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் ஸ்ட்ரெச்சருடன் கூடிய 26 பேட்டரி கார்கள், 74 சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு குறைப்பிரசவ இறப்பை குறைக்க ரூ.15 கோடி மதிப்பில் 150 பிறந்த குழந்தைகளுக்கான வென்டிலேட்டர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம்,

பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.49 கோடியே 15 லட்சம் மதிப்பிலான புதிய உயர்நிலை வண்ண அல்ட்ரா சவுண்ட் எந்திரங்கள் என மொத்தம் ரூ.65 கோடியே 45 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை ஊர்திகள் மற்றும் நவீன மருத்துவ கருவிகளை அரசு ஆஸ்பத்திரிகளின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 236 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்