வைகை அணையில் இருந்து 2,000 கனஅடி தண்ணீர் திறப்பு..!
|வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசனத்திற்காக அணையில் இருந்து பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தநிலையில், சிவகங்கை மாவட்ட 2ஆம் பூர்வீக பாசனத்திற்காக இன்று வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் உள்ள பிரதான 7 முழு சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 2 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், 3-ம் நாள் வினாடிக்கு 1,500 கனஅடியும், 4-வது நாளில் வினாடிக்கு 1,000 கனஅடியும், 5-வது நாளில் வினாடிக்கு 665 கனஅடியும் திறக்கப்பட உள்ளது. இந்த 5 நாட்களில் வைகை அணையில் இருந்து 619 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதனைத்தொடர்ந்து வைகை பூர்வீக பாசனப்பகுதியான மதுரை மாவட்டத்துக்கு வருகிற 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.