< Back
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் 200 சவரன் நகை, ரூ.12 லட்சம் கொள்ளை
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் 200 சவரன் நகை, ரூ.12 லட்சம் கொள்ளை

தினத்தந்தி
|
22 July 2024 11:58 AM IST

ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குமரி,

நாகர்கோவில் வடசேரி சக்திகார்டன் 9-வது தெருவை சேர்ந்தவர் பகவதியப்பன். இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகளுக்கு திருமணமாகி கணவரோடு வசித்து வருகிறார். இதனால் இங்குள்ள வீட்டில் பகவதியப்பனும், அவருடைய மனைவியும் தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் தன் மனைவியுடன் கோவையில் உள்ள உறவினர்களை பார்க்க பகவதியப்பன் சென்றார். பின்னர் நேற்று இரவு 10 மணி அளவில் மீண்டும் வீடு திரும்பினார். வரும் வழியில் மனைவியை உறவினர் வீட்டில் விட்டு விட்டு பகவதியப்பன் மட்டும் வீட்டுக்கு வந்தார். அங்கு கதவை திறந்து உள்ளே சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏன் எனில் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. வீட்டில் பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.

இதை வைத்து பார்த்தபோது வீட்டில் மர்மஆசாமிகள் புகுந்ததை பகவதியப்பன் உணர்ந்து கொண்டார். இதனால் அவர் பதற்றத்துடன் மாடிக்கு சென்று தான் வைத்திருந்த லாக்கரை பார்த்தார். ஆனால் லாக்கர் அங்கு இல்லை. சுவரோடு வைத்திருந்த லாக்கரை உடைத்து தூக்கிச் சென்றுவிட்டனர். அதில் சுமார் 200 பவுன் நகை மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேரில் வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் வீட்டின் பின்புற கதவில் பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்தது தெரியவந்தது. பீரோவில் பணம் இல்லாததை அறிந்த பிறகு தான் மாடிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதை உடைக்க முடியவில்லை. இதனால் சுவரில் இருந்து உடைத்து லாக்கரை தூக்கிச் சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வீட்டில் பல்வேறு இடங்களை மோப்பம் பிடித்த அந்த நாய் வெளியே வந்து அங்குமிங்குமாக ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி அவற்றில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்