விருதுநகர்
காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்
|காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம் குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித தலம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்றுவர வேண்டும் என்பது அவரவர் நம்பிக்கையாகவும் இருக்கிறது.
இந்துக்கள் காசி செல்வதை புண்ணியமாக கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதை பெருமையாக சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணத்தை கடமையாக கொள்கிறார்கள். வசதிபடைத்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் மேற்சொன்ன புனித தலங்களுக்கு சென்று வந்துவிடுகிறார்கள். வசதி குறைந்தவர்களால் அவ்வாறு செல்லமுடிவது இல்லை.
அரசு ஏற்பாடு
அவ்வாறு வசதி இல்லாதவர்கள் புனித தலங்களுக்கு சென்றுவர அரசாங்கம் உதவி வருகிறது. ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 550 பேர் அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் சென்று வருகிறார்கள். தமிழக அரசின் மானிய உதவியுடன் இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணம் செல்கிறார்கள்.
அதுபோல் இந்துக்கள் 500 பேர் ஆண்டுதோறும் மானசரோவர், முக்திநாத் ஆகிய தலங்களுக்கு சென்றுவர உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கான திட்டத்தை தொடங்கிவைத்தார்.
காசி ஆன்மிக பயணம்
இந்தநிலையில் கடந்த மே மாதம் சட்டசபையில் நடந்த இந்துசமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை அறிவிப்பில், "காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள்" என்ற தகவல் வெளியானது. அதற்கான செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், 'ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 20 மண்டலங்களில் 200 பேர் ஆன்மிக பயணத்துக்கு ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். தகுதிவாய்ந்தவர்கள் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அந்தந்த மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உள்ளவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்த ஆண்டு காசி புனித பயணத்துக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 200 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருக்கிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
'மனக்குறை நீங்கியது'
தமிழக அரசின் இந்த ஆன்மிக பயண திட்டத்தை மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
விருதுநகரை சேர்ந்த தம்பதி கார்த்தீசன்-சுப்புலட்சுமி:-
சஷ்டியப்தபர்த்திக்குப்பின் காசி விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் சற்று தாமதமாகத்தான் நிறைவேறியது. விருதுநகரில் இருந்து சென்னை சென்று சென்னையில் இருந்து வாரணாசி எக்ஸ்பிரஸ் ெரயிலில் மாறிச் சென்றோம். வட மாநிலங்களில் ெரயில் சென்றவுடன் முன்பதிவு ெரயில் பெட்டி என்ற எண்ணம் கூட இல்லாமல் வட மாநிலத்தவர் ெரயில் பெட்டியில் ஏறி பயணம் செய்யும் முதியோர்களை திணற வைக்கின்றனர். இம்மாதிரியான சிரமங்களை தவிர்க்கும் வகையில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு சிறப்பு ெரயில் இயக்குவது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த ெரயிலை மதுரை வழியாக இயக்கினால் தென் மாவட்டங்களில் இருந்து செல்வோர் மதுரை சென்று இந்த ெரயிலில் பயணிப்பதற்கு வசதியாக இருக்கும். மானாமதுரை செல்வதென்றால் போதிய ெரயில் வசதி இல்லாத நிலையில் முதியோர் பஸ்சில் மானாமதுரைக்கு செல்வது மிகுந்த சிரமத்தை தருகிறது. மேலும் ராமேசுவரம் காசி சிறப்பு ெரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் அத்தியாவசிய தேவையாகும். இதன்மூலம் அதிக எண்ணிக்கையில் முதியோர் பயணிக்க வாய்ப்பு ஏற்படும். தற்போது சீரடிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவது போன்று மற்ற புண்ணிய தலங்களுக்கும் சிறப்பு ெரயில்கள் சலுகை கட்டணத்தில் இயக்கப்பட்டால் முதியோர் பயணிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரெங்கநாதபுரம் சிவனடியார் மகாலட்சுமி:- காசிக்கு செல்ல ராமேசுவரத்தில் இருந்து ரெயில் இயக்கியது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வறுமையில் உள்ளவர்களும் காசிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தனியாக அனுப்ப இயலாத நிலையில் அவர்களுக்கு துணையாக யாரேனும் ஒருவரை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும். காசிக்கு செல்ல வேண்டும் என எண்ணுபவர்களின் மனக்குறை தற்போது நீங்கி உள்ளது.
மருத்துவ குழு
சிவகாசியை சேர்ந்த ஆறுமுகச்சாமி:- ராமேசுசுவரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதே நேரத்தில் இந்த சுற்றுலா பெயரளவுக்கு என்று இல்லாமல் அதிகளவில் பக்தர்களை அழைத்து செல்ல வேண்டும். ஆன்மிக பயணம் செய்பவர்கள் அனைவரும் 60 வயதை கடந்தவர்கள் என்பதால் ரெயிலில் பெட்டிக்கு ஒரு மருத்துவக்குழுவை உடன் அழைத்து செல்ல வேண்டும். 60 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு ஏதாவது நோய் பாதிப்பு நிச்சயம் இருக்கும். அதனை காரணம் காட்டி அவர்களை பயணம் செய்ய அனுமதி மறுக்க கூடாது. பயணம் செய்ய உடல் தகுதி உள்ளவர்களை கட்டாயம் அனுமதிக்க வேண்டும்.
ராஜபாளையம் சிவ தனலட்சுமி:- ராமேசுவரத்தில் இருந்து காசி கோவிலுக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லும் பயண திட்டத்தை வரவேற்கிறேன். இந்த யாத்திரை திட்டத்தை அதிகாரிகள் வெளிப்படை தன்மையுடன், புகார்கள் இன்றி செயல்படுத்தி பக்தர்கள் மத்தியில் அரசுக்கு நல்ல பெயரை வாங்கி தரவேண்டும். நாம் வடநாட்டுக்கு செல்வது போன்று வடநாட்டினரை நம் மாநிலத்தில் உள்ள புகழ்மிக்க கோவில்களுக்கு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இணைப்பு பாலம்
வத்திராயிருப்பு சிவபக்தர் அங்கையற்கன்னி:- இந்த ஆன்மிக பயணம் வெறும் ெரயில் போக்குவரத்து மட்டுமல்ல. பல்வேறு மாநிலங்களை இணைக்கும் இணைப்பு பாலமாகவே கருத வேண்டியுள்ளது.
காசிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசைகளோடு வெறும் கனவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த பக்தர்களுக்கு இந்த ெரயில் மூலம் அந்த கனவு நனவாகி இருக்கிறது. வயதான முதியவர்கள் காசிக்கு சென்று வழிபட இதன் மூலம் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த ஆன்மிக பயணம் இனி எப்போதும் தொடர வேண்டும்.
மொத்தத்தில் இந்த திட்டம் இந்து சமூக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.