< Back
மாநில செய்திகள்
200 வீடுகளுக்குள் மீண்டும் தண்ணீர் புகுந்தது
சேலம்
மாநில செய்திகள்

200 வீடுகளுக்குள் மீண்டும் தண்ணீர் புகுந்தது

தினத்தந்தி
|
8 Sept 2022 1:45 AM IST

சேலத்தில் பலத்த மழையினால் 200 வீடுகளுக்குள் மீண்டும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலத்தில் பலத்த மழையினால் 200 வீடுகளுக்குள் மீண்டும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பலத்த மழை

சேலம் மாநகரில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. பின்னர் மழை தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது.

இந்த மழையினால் மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய் நீருடன் மழைநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

மழையினால் கோவிந்தகவுண்டர் தோட்டம், அரிசிபாளையம், சாமிநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200 வீடுகளுக்குள் நேற்றும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிபட்டனர்.. மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த ஓடையை தூர்வாரக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உடனடியாக ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். அரிசிபாளையம், சிவதாபுரம் பகுதிகளில் யாராவது வீடுகளுக்குள் சிக்கினால் அவர்களை மீட்கும் வகையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரம் வேராடு சாய்ந்தது

இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. அயோத்தியாப்பட்டணம் பகுதியிலும் பலத்த மழையின் போது சூறாவளி காற்று வீசியதால் சாலையோரத்தில் இருந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

மேலும் செய்திகள்