< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்

வைகை ஆற்றில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு

தினத்தந்தி
|
3 Sept 2022 1:22 AM IST

மதுரை வைகை ஆற்றில் 200 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

மதுரை வைகை ஆற்றில் 200 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பக்தர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் 1 அடி முதல் 13 அடி உயரம் வரை விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். அப்போது தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிலைகளை விநாயகர் சதுர்த்தி முடிந்து 3 நாள் அன்று வைகை ஆற்றில் கரைப்பது வழக்கம். அதன்படி நகரில் வைக்கப்பட்ட 191 பெரிய சிலைகள் மற்றும் 9 சிறிய விநாயகர் சிலைகள் நேற்று மாலை கீழமாசிவீதி விளக்குத்தூண் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு விதவிதமான பல்வேறு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக நான்கு மாசி வீதியில் வலம் வந்தது. பின்னர் சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் கரைக்கப்பட்டது. அப்போது மேளதாளங்கள் முழங்க நடனமாடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதையொட்டி மதுரை நகர் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் பள்ளிவாசல், சர்ச் உள்ளிட்ட வேற்று மதத்தினர் வழிபடும் வழிபாட்டு தலங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் மதியம் 1 மணியில் இருந்து மாசி வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றதால் பொதுமக்கள் நகருக்குள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை மாற்றி அமைத்து ஓரளவு சீர் செய்தனர்.

மேலும் செய்திகள்