ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோவில்கள் புனரமைப்புக்கு ரூ.200 கோடி நிதி - தமிழக அரசு தகவல்
|2021 மே மாதம் முதல் இதுவரை 1,339 திருக்கோவில்களுக்குக் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோவில்களை புனரமைப்பு செய்வதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் கலைச் செல்வங்களாக–பண்பாட்டுப் பேழைகளாகத் திகழும் திருக்கோவில்களின் பராமரிப்பிலும், மக்கள் மனம் மகிழும் வகையில் திருக்கோவில் விழாக்களைத் தவறாமல் எழுச்சியோடு நடத்துவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்.
இதன் காரணமாக, முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே மாதம் முதல் இதுவரை 1,339 திருக்கோவில்களுக்குக் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோவில்களைப் புனரமைப்பு செய்வதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த 200 கோடி ரூபாயுடன் நன்கொடையாளர்கள் வழங்கிய ரூ.104.84 கோடி ரூபாயையும் சேர்த்து மொத்தம் ரூ.304.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது 197 திருக்கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிராமப்புறத் திருக்கோவில்களுக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கும் வழங்கப்பட்ட நிதி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உதவிபெறும் கோவில்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1,000 என்பது 1,250 என உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் 2,500 திருக்கோவில்களுக்கு ரூ.100 கோடி கூடுதலாக அரசு மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களில் ஒருகால பூஜை கூட செய்ய நிதிவசதியில்லாத 12,959 திருக்கோவில்களுக்கு வழங்கப்பட்ட வைப்பு நிதி தலா ரூபாய் ஒரு லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தி ரூ.130 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் புதிதாக 2,000 திருக்கோவில்கள் ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, தற்போது மொத்தம் 17,000 திருக்கோவில்கள் பயன்பெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக மட்டும் அரசு ரூ.200 கோடி மானியமாக வழங்கியுள்ளது.
இப்படி, திருக்கோவில் பணிகள் சிறப்பாக நடைபெற்று இந்து சமய அறநிலையத் துறை புதிய பரிமாணம் அடைந்து வருவதைக் கண்டு பொதுமக்களும், பக்தர்களும் தமிழ்நாடு முதல்-அமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் வெகுவாகப் பாராட்டுகிறார்கள்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.