தஞ்சாவூர்
20 ஆண்டுகளாக குடியேற முடியாமல் கிராம மக்கள் தவிப்பு
|20 ஆண்டுகளாக குடியேற முடியாமல் கிராம மக்கள் தவிப்பு
பாபநாசம் அருகே அரசு வழங்கிய குடிமனைகளுக்கு சாலை வசதி இல்லாததால் அந்த இடத்தில் 20 ஆண்டுகளாக குடியேற முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
சாலை வசதி கிடையாது
பாபநாசம் தாலுகா ரெங்கநாதபுரம் கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 30, குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு இலவச குடிமனைப்பட்டா வழங்கப்பட்டது. அரசால் குடிமனைப்பட்டா வழங்கிய இடமானது சாலையில் இருந்து 1 மைல் தூரத்தில் வயல்வெளி நடுவே உள்ள நத்தம் தரிசு மனை ஆகும். இந்த தரிசு நிலத்திற்கு செல்ல சாலை வசதி கிடையாது. வாய்க்கால், வரப்பு வழியாக தான் செல்லமுடியும் என்பதால் குடிமனைப்பட்டா பெற்ற கிராம மக்கள் உடனடியாக குடியேற முடியாத நிலை ஏற்பட்டது.
குடியேற முடியாமல் தவிப்பு
குடிமனைகளுக்கு செல்ல சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர வேண்டும் என அரசிடம் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அரசு வழங்கிய குடிமனைகளுக்கு செல்ல சாலை வசதி ஏதும் ஏற்படுத்தி தராததால் குடிமனை கிடைத்தும் பயன்பாடு இன்றி 30 குடும்பங்களும் குடியேற முடியாமல் தவிப்பதாக கிராமமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
ரெங்கநாதபுரம் ஆதிதிராவிடர் தெரு மக்கள் பலர் போதிய குடியிருப்பு வசதி இல்லாத நிலையில் இருந்து வந்தனர். இந்தநிலையில் அரசிடம் குடிமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி மனு செய்திருந்தோம். இதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவசமாக 30 குடும்பங்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கப்பட்டது. வீட்டுமனைகள் வழங்கப்பட்ட இடத்தில் சாலைவசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்பட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இந்த இடம் வயல்வெளி நடுவே உள்ளது. சாலைவசதி இல்லாததால் வயல்வரப்பு வழியாக தான் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். 20 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் சாலைவசதி கேட்டு போராடியும் இன்னும் எங்களுக்கு சாலைவசதி கிடைக்கவில்லை. இதனால் குடிமனைப்பட்டா கிடைத்தும் குடியேற முடியாமல் தவிக்கிறோம் என்றனர்.