திண்டுக்கல்
வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
|பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
குஜிலியம்பாறை அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர், டியூசன் எடுப்பதாக கூறி 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர், குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதையடுத்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பிரகாசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் மாணவிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார்.