< Back
மாநில செய்திகள்
வரி செலுத்தாத 20 வாகனங்கள் பறிமுதல்
நீலகிரி
மாநில செய்திகள்

வரி செலுத்தாத 20 வாகனங்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
15 Oct 2023 1:15 AM IST

ஊட்டியில் வரி செலுத்தாமல் இயக்கிய 20 வாகனங்கள் பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதித்து வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஊட்டியில் வரி செலுத்தாமல் இயக்கிய 20 வாகனங்கள் பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதித்து வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

வரி செலுத்தவில்லை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகமும், கூடலூரில் கூடுதல் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு மாதந்தோறும் சராசரியாக 400 இருசக்கர வாகனங்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதத்துக்கான வரி செலுத்தாமலும், சொந்த வாகனங்களை வாடகைக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் மற்றும் தகுதிச் சான்று பெறாமல் சில வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

20 வாகனங்கள் பறிமுதல்

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்படி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முத்துசாமி, அருண் சிவகுமார் ஆகியோர் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது காலாண்டு வரி செலுத்தாமலும், நுழைவு வரி கட்டாமலும் வந்த வெளி மாநில வாகனங்கள், தகுதி சான்று புதுப்பிக்காத வாகனங்கள் என 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், வரும் நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் சொந்த வாகனங்களை, வாடகைக்கு பயன்படுத்தினாலும், பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை மறுபதிவு செய்யாமல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இயக்கினாலும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் வரி செலுத்தாமலோ, தகுதிச் சான்று இல்லாமலோ வாகனங்களை இயக்கினால் வாகனத்தின் அனுமதி சான்று ரத்து செய்யப்படும். 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்