< Back
மாநில செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
மாநில செய்திகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

தினத்தந்தி
|
12 Jun 2022 7:59 AM GMT

அரசு தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் ஒரே நாளில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

பொதுவாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் களைகட்டும். அதன்படி இந்த ஆண்டு முதல் சீசனையொட்டி வந்த சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகள் சார்பில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோடை விழா நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஊட்டியில் இதமான காலநிலை நிலவுவதால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. மேலும் இன்று விடுமுறை நாள் என்பதாலும், நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாலும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பங்களுடன் இன்று அதிக அளவில் ஊட்டிக்கு வருகை தந்துள்ளனர்.

அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் ஒரே நாளில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, படகு இல்லம், புதிய தோட்டக்கலை பூங்கா ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் ஊட்டியின் பிரதான சாலைகளில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்