பெரம்பலூர்
ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க துணை ஆய்வாளருக்குநுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
|பெரம்பலூரில் மாற்றுத்திறனாளியின் நிலத்தை அளவீடு செய்ய மறுத்தமைக்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்க நில அளவைத்துறை துணை ஆய்வாளருக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிலத்தை அளவீடு செய்ய மறுப்பு
பெரம்பலூரை அடுத்த விளாமுத்தூரை சேர்ந்தவா் விவசாயி சந்திரசேகர் (வயது 53). மாற்றுத்திறனாளியான இவர், நொச்சியம் கிராம எல்லையில் உள்ள ஏறத்தாழ 49 சென்ட் நிலத்தில் தனது மகன் சீதாராமன் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு நிலத்தை அளவீடு செய்து, எல்லைக்கல் நடுவதற்காக நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளரிடம் 16.4.2021 அன்று மனு கொடுத்திருந்தார். இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிலம் அளப்பதற்குரிய கட்டணமும் செலுத்தியிருந்தார். இதுதொடர்பாக சந்திரசேகர் நில அளவைத்துறையினரை பலமுறை நேரில் அணுகினார். ஆனால் அவரது மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் கிராம மக்கள் சிலர் ஆட்சேபணை தெரிவிப்பதாக கூறி வட்ட துணை ஆய்வாளர், மனுதாரர் சந்திரசேகரின் நிலத்தை அளந்துகாட்டி, எல்லைக்கற்கள் நடாமல், அவரை அலையவிட்டுள்ளார். நில அளவைத்துறையினரின் அலட்சியம் மற்றும் சேவை குறைபாடு காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான சந்திரசேகர், தனது வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வட்ட துணை ஆய்வாளர், பெரம்பலூர் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட நில அளவையர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.
ரூ.20 ஆயிரம் நிவாரணம்
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர்.
பெரம்பலூரில் சந்திரசேகரின் மனுவின் மீது உரிய தீர்வு காணாமல் சேவைக்குறைபாடு காரணமாக அவரை அலையவிட்டு மனஉளைச்சலுக்கு ஆளாக்கியமைக்காக வட்ட துணை ஆய்வாளர் ரூ.20 ஆயிரம் நிவாரண தொகையும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அவரது நிலத்தை அளவீடு செய்து நான்கு புறத்திலும் எல்லைக்கல் நட்டுத்தரவேண்டும் என்றும், அதனை அறிக்கையாக நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், மேலும் மற்ற எதிர்மனுதாரர்களான தாசில்தார் முதல் கலெக்டர் வரை அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தனர்.