திண்டுக்கல்
20 ஆயிரத்து 977மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
|திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 87 மையங்களில் நடந்த பிளஸ்-2 தேர்வை 20 ஆயிரத்து 977 மாணவ-மாணவிகள் எழுதினர்.
பிளஸ்-2 தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளான நேற்று தமிழ் பாடத்துக்கு தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 11 ஆயிரத்து 132 மாணவர்கள், 12 ஆயிரத்து 54 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 186 பேர் பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 87 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு மையங்களில் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளை தவிர மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
20 ஆயிரத்து 977 பேர்
மேலும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் முன்னதாக கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு தேர்வு மையத்துக்கு சென்றனர். ஒருசில பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பங்கேற்க கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும் வழங்கப்பட்டது.
மாணவ-மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக் குள் அனுமதிக்கப்பட்ட னர். இதில் 9 ஆயிரத்து 833 மாணவர்கள், 11 ஆயிரத்து 144 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 977 பேர் தேர்வு எழுதினர். ஆனால் 1,299 மாணவர்கள் மற்றும் 910 மாணவிகள் என 2 ஆயிரத்து 209 பேர் தேர்வு எழுத வரவில்லை.
கலெக்டர் ஆய்வு
இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் வகையில், 25 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலும் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களை கொண்ட 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார். அப்போது, கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.