கன்னியாகுமரி
தொழிலதிபரிடம் 20 பவுன் கைச்சங்கிலி பறிப்புவாலிபர் அதிரடி கைது
|டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் படுத்திருந்த தொழிலதிபரிடம் 20 பவுன் கைச்சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தக்கலை,
டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் படுத்திருந்த தொழிலதிபரிடம் 20 பவுன் கைச்சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலதிபர்
தக்கலை அருகே உள்ள கீழமூலச்சல் பகுதியை சேர்ந்தவர் சகாயராஜன் (வயது 50). இவர் சென்னை அடையாறு பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் கீழமூலச்சலில் வசிப்பதால் அடிக்கடி அவர் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
அதன்படி ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு தக்கலையில் இருந்து பத்மநாபபுரம் செல்லும் வழியில் வெள்ளரி ஏலா என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார்.
அன்றைய தினம் எப்போதும் போல் இல்லாமல் அவர் அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது. இதனால் அவரால் வீடு நோக்கி நடந்து செல்ல முடியவில்லை. இதனால் அவர் தட்டுத்தடுமாறியதால் அருகில் உள்ள ஒரு கடையின் திண்ணையில் இருந்தார். பின்னர் அங்கேயே அசந்து தூங்கி விட்டார்.
அதன்பிறகு போதை தெளிந்ததும் இரவு நேரத்தில் அவர் தனது வீடு நோக்கி நடந்து சென்றார்.
கைச்சங்கிலி மாயம்
அப்போது அவர் கையில் அணிந்திருந்த 20 பவுன் கைச்சங்கிலியை (பிரேஸ்லெட்) காணவில்லை. இதனை பார்த்ததும் அவருடைய சகோதரர் கைச்சங்கிலி எங்கே என்று கேட்டுள்ளார்.
உடனே அதிர்ச்சி அடைந்த சகாயராஜன் தனது சகோதரரை அழைத்துச் சென்று தான் படுத்திருந்த இடம் மற்றும் மதுக்கடையில் மது அருந்திய இடம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கைச்சங்கிலியை தேடிபார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
பின்னர் இதுதொடர்பாக மறுநாள் சகாயராஜன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்தார்.
தொடர்ந்து உடனே களத்தில் இறங்கிய போலீசார், சகாயராஜன் தூங்கிய போது யாராவது அவருடைய பக்கத்தில் சுற்றி வந்தார்களா? என சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
இதில் ஒரு வாலிபர் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்ததாக அங்குள்ள கடைக்காரர் தெரிவித்தார். உடனே அவர் கொடுத்த அடையாளத்தின்படி சம்பந்தப்பட்ட நபரை கண்காணித்தனர். அந்த வாலிபர் தக்கலையை அடுத்த மணலி பகுதியில் நின்றதை அறிந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
வாலிபர் கைது
அப்போது அவரிடம் சகாயராஜனுக்கு சொந்தமான கைச்சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கையும், களவுமாக சிக்கிய அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தக்கலை மக்காயிபாளையம் பகுதியை சேர்ந்த சிராஜிதீன் என்பவரின் மகன் செய்யது முகம்மது (28) என்பதும், இறைச்சி வியாபாரி என்பதும் தெரியவந்தது.
மேலும் பிடிபட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில், நான் மதுகுடிக்க டாஸ்மாக் கடைக்கு சென்றேன். அப்போது அருகில் உள்ள ஒரு கடையின் திண்ணையில் மதுபோதையில் ஒருவர் படுத்திருந்ததை பார்த்தேன். அவர் கையில் தங்க கைச்சங்கிலி அணிந்திருந்ததை பார்த்து அதனை திருடலாம் என முடிவு செய்தேன். அதன்படி நைசாக அதனை கையில் இருந்து பறித்து விட்டு தப்பி விட்டேன். பின்னர் அந்த நகையை விற்க முயன்ற போது சிக்கி விட்டேன் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து 20 பவுன் கைச்சங்கிலியை மீட்டனர். இந்த நகையின் மதிப்பு ரூ.8 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.