< Back
மாநில செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 20 பேர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 20 பேர் கைது

தினத்தந்தி
|
11 May 2023 1:02 PM IST

ஸ்ரீபெரும்புதூரில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர், கடந்த மார்ச் மாதம் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அதைதொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பா.ஜ.க. பட்டியலின மாநில பொருளாளருமான பி.பி.ஜி.டி. சங்கர் கடந்த மாதம் 27-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

தொடர்ந்து 2 கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியதால் மீண்டும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தனிப்படை அமைத்து ஸ்ரீபெரும்புதூர் முழுவதையும் சுற்றி வளைத்தும், வாகன சோதனை நடத்தியும் கடந்த 10 நாட்களாக இரவும் பகலும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பல குற்ற சம்பவங்களில் தொடர்புடைய கிளாய் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 31), பாலமுருகன் (30), அசோக் என்ற ரத்தினகுமார் (25), மகேஷ் (24), வானவராயன் (30), அஜித்குமார் (26) ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த வினோத் (31), திருநாவுக்கரசு (30), அருண் (27), வீரவேல் (27), ஸ்ரீபெரும்புதூர் வி.ஆர்.பி. சத்திரம் பகுதியை சேர்ந்த குணால் (21), சூர்யா (24), புருஷோத்தமன் (29), தீபக் ராஜ் (22), வீராசாமி பிள்ளை தெருவை சேர்ந்த லோகேஸ்வரன் (28), வளர்புரம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் (35), தொடுகாடு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (25), பாடிச்சேரி பகுதியைசேர்ந்த வாசுதேவன் (24), சரவணன் (31), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (22) ஆகியோர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்