புதுக்கோட்டை
வீட்டின் சுவர் ஏறி குதித்த 2 வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு
|ஆலங்குடி அருகே வீட்டின் சுவர் ஏறி குதித்த 2 வாலிபர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
வீட்டின் சுவர் ஏறி குதித்த வாலிபர்கள்
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை 2 வாலிபர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அந்த வழியாக சென்றபோது அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றனர்.
இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்ததும், பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்வதும் தெரியவந்தது.
போலீசில் ஒப்படைப்பு
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த வாலிபர்களை தேடினர். அப்போது அவர்கள் வடகாடு முக்கம் பகுதியில் நின்று கொண்டு இருந்தனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் அப்பகுதி மக்கள் உதவியுடன் அந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ஆலங்குடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த சிவப்பிரகாசம் (வயது 31) என்பதும், மற்றொருவர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (24) என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஈரோடு மாவட்டத்தில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.