திருநெல்வேலி
2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|நெல்லை மாவட்டத்தில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பாளையங்கோட்டை மகிழ்ச்சிநகர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஜீவா மகன் செல்வகுமார் (வயது 27). இவர் அடிதடி மற்றும் திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டதாக நாங்குநேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று செல்வகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நேற்று சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
சேரன்மாதேவி போலீஸ் நிலைய பகுதியில் அடிதடி, கொலை முயற்சி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக, சேரன்மாதேவி, நேதாஜி நகரை சேர்ந்த மாயாண்டி மகன் மாயா கணபதி (20) போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், சேரன்மாதேவி இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்காதர் ஆகியோரின் பரிந்துரையை ஏற்று மாயா கணபதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.