திருச்சி
2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை
திருச்சி உறையூர் சன்னதி தெருவை சேர்ந்த முருகனின் மகன் சண்முகம் (வயது 25). குதிரை வண்டி வைத்திருந்த இவர், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று குதிரை வண்டி பந்தயங்களில் கலந்து கொள்வது வழக்கம். கடந்த மே மாதம் 26-ந்தேதி பட்டப்பகலில் குழுமணி டாக்கர் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது, சண்முகம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பந்தயத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக, பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த விஜி (23), தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த அபிஷேக் (22) ஆகியோர் உள்பட 6 பேர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இதில் விஜி, அபிஷேக் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தால் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் என்று போலீசார் பரிந்துரை செய்ததை தொடர்ந்து 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.