கடலூர்
கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண்
|நிதிநிறுவன அதிபர் கொலை வழக்கில் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண்
கள்ளக்குறிச்சி
சென்னை சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). அமைந்தகரை செனாய்நகர் புல்லா அவென்யூ பகுதி 7-வது குறுக்கு தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர் வட்டிக்கும், மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கும் கடன் கொடுத்து வந்துள்ளார். ஆறுமுகம் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை வழிமறித்து ஓட ஓட வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆறுமுகம் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னை தஞ்சை நகரை சேர்ந்த பெருமாள் மகன் சந்திரசேகர்(28), செனாய் நகரை சேர்ந்த செல்வம் மகன் ரோகித்ராஜ்(31) ஆகிய 2 பேரும் நேற்று கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து சந்திரசேகர், ரோகித்ராஜ் ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.