புதுக்கோட்டை
அரசு பஸ் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் பலி; 3 பேர் படுகாயம்
|விராலிமலை அருகே துக்க நிகழ்ச்சிக்கு வந்த போது அரசு பஸ் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
துக்க நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா கொடும்பாளூரை சேர்ந்தவர் ஆண்டி. இவரது மனைவி புரவி. இவர் இறந்து விட்டார். இந்நிலையில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையிலிருந்து அவரது உறவினரான குழுமி என்பவர் தனது குடும்பத்துடன் காரில் வந்துள்ளார். பின்னர் இறுதிச்சடங்கில் அவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது காரில் குழுமியின் மகன் பழனியப்பன் (வயது 22) மற்றும் அவர்களது நண்பர்களான கொடும்பாளூரை சேர்ந்த சிதம்பரம் மகன் சதீஸ் (17), கருத்தகண்ணு மகன் சரவணன் (16), இளையராஜா மகன் யோகேஸ்வரன் (14) உள்பட 5 பேர் கொடும்பாளூர்-புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். காரை பழனியப்பன் ஓட்டினார்.
2 வாலிபர்கள் பலி
அப்போது வேம்பனூரிலிருந்து மணப்பாறை நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சில் பழனியப்பன் ஓட்டிவந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பழனியப்பன் மற்றும் சதீஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இடுபாடுகளில் சிக்கி மற்ற 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த சரவணன் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதற்கிடையே போலீசார் பழனியப்பன், சதீஸ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் சிவக்குமார் லேசான காயத்துடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் கார் அரசு பஸ் மீது மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.