திருச்சி
போலீசிடம் தப்பிக்க கல்லணையில் குதித்த 2 வாலிபர்கள்
|போலீசிடம் தப்பிக்க கல்லணையில் குதித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சங்கிலி பறிப்பு
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிணி (வயது 23). இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது தோழியை பார்த்து விட்டு திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி பாலக்கரையை சேர்ந்த செல்வகுமார்(20), திருச்சி காஜாபேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்த முகமது செலார்ஷா (19) ஆகியோர் ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து ஹரிணி கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் செல்வகுமார், முகமது செலார்ஷா ஆகியோர் திருச்சியை அடுத்த கல்லணை பகுதிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட தோகூர் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதில் அந்த வாலிபர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தப்பிச் சென்று பதுங்கினர். இதையடுத்து போலீசார் அவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை தோகூர் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கல்லணையில் குதித்தனர்
இதைத்தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு மேல் அந்த வாலிபர்கள் தோகூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச்செல்ல முயன்றனர். இதனை கவனித்த போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதனால் போலீசாரிடம் இருந்து மீண்டும் தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓடி கல்லணையில் கரிகால சோழன் யானை சிலை அருகே காவிரி ஆற்றில் குதித்தனர். இதனால் அந்த வாலிபர்களை விரட்டி வந்த தோகூர் போலீசார், அவர்களை பிடிக்க முடியாமல் போலீஸ் நிலையத்திற்கு திரும்பினர்.
இதற்கிடையே கல்லணை காவிரி ஆற்றில் குதித்த வாலிபர்கள், சுமார் 20 நிமிடத்திற்கு மேல் தண்ணீரில் நீச்சல் அடித்தனர். ஒரு கட்டத்தில் ேசார்வடைந்து நீந்த முடியாதநிலையில் தத்தளித்த அவர்கள், தங்களை காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர். அதைக்கேட்டு அங்கு வந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்ணீரில் இருந்து 2 பேரையும் மீட்டு தோகூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கும்பகோணத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடியதும், திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் ஹரிணியிடம் சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது. இது குறித்து தோகூர் போலீசார் கோட்டை போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் கோட்டை போலீசார் செல்வகுமார் மற்றும் முகமது செலார்ஷா ஆகியோரை திருச்சிக்கு அழைத்து வந்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைந்தனர்.