வேலூர்
பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
|வேலூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நகை பறிப்பு
வேலூரை அடுத்த செதுவாலை பகுதியை சேர்ந்தவர் ஜானகி (வயது 42). இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இன்று காலை இவர் வல்லண்டராமம் கூட்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை 2 பேர் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்தனர். யாரும் இல்லாதபோது திடீரென அவர்கள் ஜானகியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகையை கழற்றி கொடுக்குமாறு கூறினர்.
அதிர்ச்சி அடைந்த அவர் மறுக்கவே அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ஜானகி விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
2 வாலிபர்கள் கைது
இதையடுத்து விரிஞ்சிபுரம் போலீசார் ரோந்து சென்றபோது 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள் விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சுதாகர் (29), அஜித் (21) ஆகியோர் என்பதும், அவர்கள் ஜானகியிடம் தங்கச்சங்கிலி பறித்ததும் தெரியவந்தது.
பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து, மோட்டார்சைக்கிளையும், தங்கச்சங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.