நாகை: டீக்கடைக்கு வழி கேட்பது போல் பெண்ணின் தாலி செயினை பறித்த 2 வாலிபர்கள் கைது
|நாகை அருகே பெண்ணிடம் ஏழு பவுன் தாலி செயின் பறித்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.
நாகை:
நாகை மாவட்டம் வாய் மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி இளவரசி. இவர் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மழை பெய்ததால் பேருந்தில் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். அந்த நேரம் மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர்கள் இருவர் அவரிடம் டீக்கடை எங்கு உள்ளது என்று கேட்டுக்கொண்டே கழுத்தில் போட்டிருந்த 7 பவுன் தாலி செயினை அறுத்து சென்றுவிட்டனர்.
இதை குறித்து வாய்மேடு போலீசார் மற்றும் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர் ஆயக்காரன்புலத்தில் இருந்து அவர்கள் சென்ற திசையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சதீஷ்குமார் (26 )மற்றும் அவரது நண்பர் கீழ நம்மங் குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த முத்துச்செல்வம் மகன் பிரபாகரன் (29) இருவரும் திருடி சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் இருவரும் ஆயக்காரன்புலத்தில் உள்ள கலிதீர்த்த அய்யனார் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த போது கைது செய்தனர். திருடிய செயினை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து நாகை சிறையில் அடைக்கப்பட்டனர்.