அரியலூர்
அரசு பஸ் மீது கல்வீசிய 2 வாலிபர்கள் கைது
|ஜெயங்கொண்டத்தில் அரசு பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டு அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தகராறு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர் வழியாக கும்பகோணம் நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் தொலார் கிராமத்தை சேர்ந்த அன்பழகன்(வயது 47) ஓட்டினார். அன்னக்காரன்பேட்டை கிராமத்தை சேர்ந்த புகழேந்தி(52) கண்டக்டராக இருந்தார். ஜெயங்கொண்டம் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில், அந்த பஸ் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் புறப்பட்டது. அப்போது பெண் ஒருவர் பஸ்சில் ஏறுவதற்காக ஓடி வந்தார்.இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தி, அவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், பஸ் டிரைவரிடம், அந்த பெண் பஸ்சில் ஏற வருவது தெரியாமல் பஸ்சை இயக்குகிறீர்களே? என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். அதற்கு டிரைவர் அந்த பயணியை ஏற்றிக்கொண்டுதான் செல்கிறோம், என்று கூறிவிட்டு பஸ்சை கும்பகோணம் நோக்கி ஓட்டி வந்தார். தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது மீண்டும் 2 பேரும், பஸ் டிரைவரிடம் தகராறு செய்துள்ளனர்.
2 வாலிபர்கள் கைது
அவர்களை சமாளித்து அங்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றபோது, ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரி அருகே பைபாஸ் மேம்பாலத்திற்கு முன்பாக மீண்டும் அந்த நபர்கள் பஸ்சை மறித்து, பஸ்சின் மீது கல்லை எடுத்து எறிந்துள்ளனர். இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்தது. இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து ேமாட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகந்நாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரசு பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், பஸ் கண்ணாடியை உடைத்தது பெரியவளையம் கிழக்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் பெரியவளையம் கிராமம் கிழக்கு அண்ணா நகரை சேர்ந்த அன்பாயிரம் மகன் அருண்குமார்(20), அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சி மகன் சதீஷ்(21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.