விழுப்புரம்
திண்டிவனம் அருகேவெளிநாட்டு பறவைகளை வேட்டையாடிய 2 வாலிபர்கள் கைதுவனத்துறையினர் நடவடிக்கை
|திண்டிவனம் அருகே வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடிய 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
திண்டிவனம்,
வெளிநாட்டு பறவைகள்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள எண்டியூர் கிராம ஏரிக்கரை வனப்பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகளை சிலர் வேட்டையாடி வருவதாக திண்டிவனம் வனத்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் வன சரகர் புவனேஷ் தலைமையில் வனவர் பாலசுந்தரம், வனக்காப்பாளர்கள் பிரபு, பச்சையப்பன், சதாம் உசேன், வேட்டை தடுப்பு காவலர்கள் சக்திவேல், சுமன், அஜித்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் தகவல் கிடைக்க பெற்ற ஏரிப்பகுதிக்கு உடனே விரைந்து சென்றனர்.
தப்பிச் சென்றனர்
வனத்துறையினர் வருவதை பார்த்ததும் பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மர்மநபர்கள் 2 பேர் ஒரு சாக்கு மூட்டையை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதைபார்த்து உஷாரான வனத்துறை அதிகாரிகள் அந்த நபர்களை விரட்டிச் சென்று, மடக்கி பிடித்து, சாக்கு மூட்டையை திறந்து சோதனையிட்டனர். அப்போது அந்த மூட்டைக்குள் வெளிநாட்டு பறவையான மோர்கன் உள்ளிட்ட பல்வேறு வகைகளை சேர்ந்த 38 பறவைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள் பறிமுதல்
அதைத்தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மயிலம் பகுதியை சேர்ந்த சகாயம் மகன் சந்திரசேகர் (வயது 26), புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த பூபதி (22) ஆகியோர் என்பதும், ஏரி பகுதியில் சுற்றிய வெளிநாட்டு பறவைகளை உண்டிகல் மூலம் வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் பறவைகளை வேட்டையாடிய 2 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வெளிநாட்டு பறவைகள் மற்றும் அதனை வேட்டையாடி எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.