சேலம்
ஜெயிலில் கைதிகளை சந்திக்கவந்த 2 வாலிபர்கள் கைது
|கைதிகளுக்கு வழங்க கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
மத்திய சிறை
சேலம் மத்திய சிறையில் கைதிகளிடையே அவ்வப்போது கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த சிறை நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்கு எடுத்துக்காட்டாக அரக்கோணத்தை சேர்ந்த சசிக்குமார் (வயது 30), நாமக்கல்லை சேர்ந்த பாரத் (32), மணிகண்டன் (32), மவுலீஸ்வரன் (31), திருவண்ணாமலையை சேர்ந்த பிரேம்குமார் ஆகிய 5 பேர் நேற்று சேலம் சிறைக்க வந்தனர். பின்னர் கைதிகள் பரத்குமார், ஜெகன், யுகேந்திரன், குரு, அஜீத் ஆகிய 5 பேரை பார்க்க வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.
கஞ்சா, சிகரெட் புகையிலை
இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த உணவுபொருட்கள் அடங்கிய பார்சலை சிறைக்காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது வர்க்கி பாக்கெட் போன்று வடிவமைத்து அதில் 80 கிராம் கஞ்சா, 20 கிராம் சிகரெட் புகையிலை ஆகியவை மறைத்து எடுத்து வந்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் சிறைக்காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கைதிகளுக்கு கொடுக்க கஞ்சா கொண்டு வந்தது தெரிந்தது.
அப்போது மணிகண்டன், மவுலீஸ்வரன், பிரேம்குமார் ஆகிய 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சசிக்குமார், பாரத் ஆகிய 2 பேரை சிறைக்காவலர்கள் பிடித்து அஸ்தம்பட்டி போலீசில் ஒப்புடைத்தனர். இதையடுத்து கைதிகளுக்கு வழங்க கஞ்சா மறைத்து எடுத்த வந்ததாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் செய்தனர். பின்னர் தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
சென்னை சிறை
இது குறித்து சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத்திடம் கேட்ட போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மேற்கண்ட 5 பேரும் சென்னை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டவர்கள்.
அவர்களை பார்க்க வந்த அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் கஞ்சா மறைத்து எடுத்து வந்த போது பிடிபட்டு உள்ளனர். இது குறித்து கைதிகள் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றோம் என்று கூறினார்.