சென்னை
ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
|மருந்து ஏஜென்சிக்கு பெயர் மாற்றி தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மருந்து உதவி இயக்குனருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பெயர் மாற்றம்
திருவள்ளூர் ராஜாஜிபுரம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் அசோக். இவரது நண்பர் சுதர்சன். இவர்கள் இருவரும் இணைந்து மருந்து விற்பனை முகமை நடத்தி வந்தனர். இதுதவிர சுதர்சன் தனியாக ராம்சன் மருந்து ஏஜென்சியை நடத்தி வந்தார். இதற்கிடையில் சுதர்சன் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து 2 மருந்து ஏஜென்சி உரிமத்தின் பெயர்களை மாற்றி தர அசோக், இறந்த நண்பர் சுதர்சன் மனைவி அனுராதாவுடன் திருவள்ளூரில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பம் கொடுத்தார்.
ரூ.20 ஆயிரம் லஞ்சம்
அங்கு பணியில் இருந்த சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் விஜயராகவன் (வயது 65) தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பெயர் மாற்றி தருவேன் என கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக், இதுகுறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அசோக்கிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அதன்படி அசோக், அலுவலகத்தில் இருந்த விஜயராகவனிடம் ரூ.20 ஆயிரத்தை லஞ்சமாக கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜயராகவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மருந்து உதவி இயக்குனர் கைது
அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்பொழுது விஜயராகவனுக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக விஜயராகவன் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து சென்னை ஐகோர்ட்டு திருவள்ளூர் கோர்ட்டு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து விஜயராகவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து விஜயராகவனுக்கு திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி ஆர்.வேலரஸ் பிடிவாரண்டு பிறப்பித்தார். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி கலைச்செல்வம் தலைமையிலான திருவள்ளூர் போலீசார் நேற்று முன்தினம் விஜயராகவனை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.