தூத்துக்குடியில் பனைமரம் முறிந்து விழுந்து 2 வயது குழந்தை பலி...!
|தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக பனை மரம் முறிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதே நேரத்தில் காற்றும் வீசத் தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. அதன்படி இன்று காற்று வீசி வந்தது. மாலையில் காற்றின் வேகம் அதிகரித்தது. இரவில் லேசான சாரல் மழையும் பெய்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி கே.வி.கே.நகர் பகுதியை சேர்ந்த டிரைவரான இசக்கியப்பன் என்பவரின் மகள் முத்துபவானி(வயது 2) வீட்டின் முன்பு தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் வீட்டின் அருகே நின்ற உயரமான பனை மரம் காற்று காரணமாக முறிந்து விழுந்தது.
இந்த பனை மரம் அங்கு விளையாடிக் கொண்டு இருந்த முத்துபவானி மீது விழுந்து நசுக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த முத்துபவானி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.