< Back
மாநில செய்திகள்
ஆயுர்வேத மருந்துக்கு உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
மாநில செய்திகள்

ஆயுர்வேத மருந்துக்கு உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
1 Sept 2022 8:49 PM IST

ஆயுர்வேத மருந்துக்கு உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆயுர்வேத மருந்தக உரிமையாளர் எஸ்.மாரிமுத்து இலக்குவன். இவர், தான் தயாரித்த 14 ஆயுர்வேத மருந்து பொருட்களுக்கு உரிமம் வழங்க கோரி, தேனாம்பேட்டை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அவரது மருந்துகளை பல கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டன. இறுதியாக இந்த மருந்துகளுக்கு உரிமம் வழங்கும் அலுவலரான, பாஸ்கர் சுரேஷ் குமாரிடம், மாரிமுத்து இலக்குவன் கடந்த 2008-ம் ஆண்டு விண்ணப்பம் கொடுத்தார்.

அப்போது, உரிமம் வழங்க பாஸ்கர் சுரேஷ்குமார் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் மாரிமுத்து இலக்குவன் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசார், லஞ்ச பணத்தை வாங்கியபோது கையும், களவுமாக பாஸ்கர் சுரேஷ்குமாரை போலீசார் பிடித்தனர்.

இந்த வழக்கு, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு விசாரித்தது. போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு வக்கீல் பி.மனோகரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.ஓம்பிரகாஷ் பிறப்பித்த தீர்ப்பில், "குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பாஸ்கர் சுரேஷ்குமாருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்,

மேலும் செய்திகள்