சென்னை
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
|கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னையை அடுத்த புழல் காவாங்கரை குரு சாந்தி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் நிர்மலா(வயது 49). இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் இவர் வசித்து வருகிறார். மாடி வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி கசிய தொடங்கியது. இதனை சுத்தம் செய்வதற்காக அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரிடம் நிர்மலா கூறினார்.
அதன்பேரில் கணேசன், செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் நேதாஜி தெருவைச் சேர்ந்த பாஸ்கரன்(55), செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலகணேசன் நகர் 11-வது தெருவைச் சேர்ந்த இஸ்மாயில்(36) ஆகிய 2 தொழிலாளர்களை நேற்று மதியம் நிர்மலா வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக பணியில் அமர்த்தினார்.
தொழிலாளர்கள் இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 2 பேரும் கழிவுநீர் தொட்டிக்குள் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் மூழ்கிய பாஸ்கரன், இஸ்மாயில் இருவரையும் பிணமாக மீட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொளத்தூர் மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம், புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின்1 உரிமையாளர் நிர்மலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.