கன்னியாகுமரி
2 பெண்களிடம் 8 பவுன் நகை பறிப்பு
|2 பெண்களிடம் 8 பவுன் நகைபறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தென்தாமரைகுளத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றுமுன்தினம் மாலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. மாலை நேரம் என்பதால் பஸ்சில் மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த பஸ்சில் தென்தாமரைகுளம் பகுதியை சுந்தரபாண்டியன் மனைவி பானுமதி (வயது 67) என்பவரும் பயணம் செய்தார். ராமன்புதூர் சந்திப்பு வந்ததும் பஸ்சில் இருந்து பானுமதி இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் நகையை பறித்தது தெரியவந்தது. இதுகுறித்து பானுமதி நேசமணி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல நாகர்கோவில் பார்வதிபுரத்தை சோ்ந்த செல்வி (60) என்பவர் நேற்றுமுன்தினம் பெருவிளை சாஸ்தா கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், செல்வி கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.