< Back
மாநில செய்திகள்
பல்லடம்: மகனுக்கு பெண் பார்த்து விட்டு திரும்பிய போது சோகம்.. சரக்கு லாரி மோதியதில் 2 பேர் பலி
மாநில செய்திகள்

பல்லடம்: மகனுக்கு பெண் பார்த்து விட்டு திரும்பிய போது சோகம்.. சரக்கு லாரி மோதியதில் 2 பேர் பலி

தினத்தந்தி
|
19 Sep 2022 4:24 AM GMT

பல்லடத்தில், நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு வேன் மோதி 2 பெண்கள் பலி ஒருவர் பலத்த காயம்.

பல்லடம்:

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

பல்லடத்தில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு வேன் மோதி 2 பெண்கள் பலியானார்கள். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்தவர்கள் செல்வராஜ் (வயது 49). இவருடைய மனைவி ராஜம்மாள் (47). இவர்களது மகன் கிட்சன் ஞானதுரை (27). ஞானதுரைக்கு பெண் பார்க்க தனது உறவினர்களான செல்வி, ஆசீர் கோவில்பிள்ளை, அகஸ்டின் ஆகிய 6 பேரும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையத்துக்கு வந்தனர்.

பெண் பார்த்து விட்டு கோவைக்கு திரும்பிய போது பல்லடம் தாசில்தார் அலுவலகம் எதிரே தாங்கள் வந்த வேனை சாலையோரமாக நிறுத்தி விட்டு அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது பல்லடத்தில் இருந்து செஞ்சேரிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று‌ எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதி பின்னர் நின்ற வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் வந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த ராஜம்மாள், செல்வராஜ், அகஸ்டின் உள்பட 5 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராஜம்மாள் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவரான உடுமலையைசேர்ந்த பட்டீஸ்வரன் என்பவர் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் சரணடைந்தார். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் ஜெராக்ஸ் மற்றும் பேக்கரி உள்ளது. அங்கு எப்போதும் 50 பேர் நின்றுகொண்டு இருப்பார்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால் கடைகள் விடுமுறை விடப்பட்டு அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்