< Back
மாநில செய்திகள்
மரத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி; 4 பேர் படுகாயம்
மாநில செய்திகள்

மரத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி; 4 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
14 Aug 2023 12:18 AM IST

மரத்தில் கார் மோதி 2 பெண்கள் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கெங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 40). இவர் மஞ்சள் பை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுகன்யா(35), மகன்கள் நவநீப்(6), ஜெகதீஷ் (5), உறவினர் மகேஸ்வரி(41), பொன்ராஜ் என்பவரின் மனைவி சீதாலட்சுமி(63) ஆகிய 6 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று முன்தினம் கொங்கலாபுரத்திற்கு காரில் திரும்ப வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் தனியார் என்ஜினீரியர் கல்லூரி அருகே வந்தபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் புகுந்து அங்குள்ள பனைமரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சுகன்யா, சீதாலட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சரவணகுமார் உள்பட மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றொரு விபத்து

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் வெங்கடாசலம். அவருடைய மகன் ஜெகநாதன் (வயது 27). இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் கடந்த 11-ந்தேதி ஒரு காரில் திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து மதுரைக்கு சென்றுவிட்டு சேலம் திரும்பி கொண்டிருந்தனர். காரை, டிரைவர் மகேந்திரன் (39) என்பவர் ஓட்டினார். மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மாவூர் அணை பிரிவு அருகே வந்த வந்தபோது, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் காரில் இருந்த ஜெகநாதன், முருகேசன் (30) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் மகேந்திரன் மற்றும் காரில் வந்த சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த கார்த்திக் (40), சங்கர் (29), கார்த்திக் (31) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்